சம்பூர் விவகாரத்தில், அரசாங்கத்தின் தலையீட்டை மதிப்பதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் தெரிவித்துள்ளார்.
சம்பூரில் கடற்படை அதிகாரியை திட்டிய விவகாரத்தினால் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு, கிழக்கு மாகாண முதல்வர் பங்கேற்கும் நிகழ்வுகளை முப்படையினரும் புறக்கணிப்பதென்றும், முப்படையினரின் முகாம்களுக்குள் அவரை அனுமதிப்பதில்லை என்றும் முடிவெடுத்திருந்தது.
இந்த முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஜப்பான் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றுமுன்தினம் நாடு திரும்பியதையடுத்து, பாதுகாப்பு அமைச்சின் உத்தரவு நேற்று விலக்கிக் கொள்ளப்பட்டது.
கிழக்கு முதல்வருக்கு எதிராக விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதையடுத்து, இதுதொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் கருத்து வெளியிட்ட அவர், இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் தலையீட்டை மதிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இராணுவத்தின் செயற்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது என்றாலும், இந்தச் சம்பவத்துக்காக தாம் ஆழ்ந்த வருத்தம் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.