Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » News » Important News » இன்று சிறிலங்கா அதிபரைச் சந்திக்கின்றனர் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்

இன்று சிறிலங்கா அதிபரைச் சந்திக்கின்றனர் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் நேற்று புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுடன் நடந்த கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கீரிமலையில் அமைக்கப்பட்ட 100 வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

கொல்லப்பட்ட மாணவர்களின் பெற்றோரை அவர் சந்திக்கவுள்ளதாகவும், அவர்களின் வீடுகளுக்குச் செல்லவுள்ளதாகவும் ஊகங்கள் வெளியாகியிருந்தன.

அதேவேளை, மாணவர்களின் படுகொலைக்கு நீதி வழங்குமாறு கோருவதற்கு சிறிலங்கா அதிபரைச் சந்திக்க மாணவர்களும் அனுமதி கோரியிருந்தனர்.

எனினும் மாணவர்களின் இந்தக் கோரிக்கைக்கு எந்தப் பதிலும் அளிக்கப்படாத நிலையில், நேற்றுக்காலை யாழ்.பல்கலைக்கழக நுழைவாயிலை மூடி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்.பல்கலைக்கழக நிர்வாகச் செயற்பாடுகளை முடக்கும் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்திருந்த நிலையில், அமைச்சர் சுவாமிநாதன், மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தினருடன் பேச்சுக்களை நடத்த வந்தார்.

அமைச்சர் சுவாமிநாதனுடன் நடத்திய பேச்சுக்களின் போது, இன்று பிற்பகல் 12.30 மணியளவில் சிறிலங்கா அதிபரை கொழும்பில் மாணவர்கள் சந்திப்பதற்கு ஒழுங்கு செய்து தருவதாக உறுதி அளிக்கப்பட்டது.

இதையெடுத்து யாழ். பல்கலைக்கழக நிர்வாக முடக்கப் போராட்டத்தை மாணவர்கள் நேற்று பிற்பகல் கைவிட்டனர்.

அதேவேளை, நேற்று யாழ். பல்கலைக்கழகத்தில் நடந்த சந்திப்பில் செய்தி செய்தி சேகரிப்பதற்கு மாணவர்கள் ஊடகவியலாளர்களை அனுமதிக்கவில்லை.

ஊடகவியலாளர்களை அனுமதித்தால் தான், அமைச்சருடனான சந்திப்புக்கு தான் உள்ளே வருவேன் என்று யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் கூறிய போதிலும், மாணவர்கள் ஊடகவியலாளர்களை அனுமதிக்கவில்லை.

அமைச்சர் வந்த பின்னர் அவர்களை அனுமதிப்பதாக கூறி, துணைவேந்தரை ஏமாற்றி உள்ளே அனுப்பிய மாணவர்கள், அமைச்சர் வந்த பின்னரும், ஊடகவியலாளர்களை அனுமதிக்க மறுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *