சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலர்கள் நிஷா பிஸ்வால் மற்றும் ரொம் மாலினோவ்ஸ்கி ஆகியோர் இன்று காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர்.
தெற்கு மத்திய-ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் மற்றும், ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி ஆகியோர் இன்று காலை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரின் இல்லத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திக்கவுள்ளனர்.
இன்று காலை 8.30 மணியளவில்இடம்பெறும் இந்தச் சந்திப்பில் இரா. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொள்வர்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் இந்தச் சந்திப்பில் பங்கேற்பார் என்று முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், அவர் உடல் நலக்குறைவு காரணமாக கொழும்பு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவர் சந்திப்பில் பங்கேற்பது சந்தேகமே என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சந்திப்பையடுத்து, இன்று காலை 9.30 மணியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடகங்களைச் சந்திக்கவுள்ளது.
அமெரிக்கத் தூதுவரின் இல்லத்துக்கு வெளியே நடக்கவுள்ள இந்தச் சந்திப்பில், தற்போதைய நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்படவுள்ளது.