நாட்டை பிளவுபடுத்துவதையோ, இன்னொரு போரையோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்ற பின்னர் தென்பகுதிக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த இரா.சம்பந்தன், மாத்தறையில், இடம்பெற்ற நிகழ்வுகளில் பங்கேற்றார். இதையடுத்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,
“அதிகாரங்கள் பகிரப்பட்ட- பிளவுபடாத ஒரே நாட்டுக்குள் ஒற்றுமையாக வாழ்வதையே தமிழ் மக்கள் விரும்புகின்றனர்.
ஒரு நாட்டுக்கு முப்படைகளும் அவசியமானவை.
நிதி,வெளிவிவகாரம், குடிவரவு, குடியகல்வு ஆகிய அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்தின் வசமே இருக்க வேண்டும்.
நாட்டைப் பிளவுபடுத்துவதற்கோ, இன்னொரு போரையோ எமது கட்சி விரும்பவில்லை.
நாம் போரின் விளைவுகளை அனுபவித்தவர்கள். எதிர்காலத்தில் இன்னொரு போருக்கு வழிவகுக்கும் காரணிகளை இல்லாமல் செய்ய வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.