இந்திய தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கான தமிழ்நாட்டு அணிக்கு ஈழத்தமிழ் சிறுமி தேர்வு!
அகில இந்திய அளவில் நடத்தப்படும் தேசிய நீச்சல் போட்டிக்கான தமிழ்நாட்டு அணிக்கு ஈழத்தமிழ் சிறுமி தனுஜா ஜெயக்குமார் தேர்வாகியுள்ளார்.
தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் தமிழ்நாட்டு அணி சார்பில் பங்கேற்கும் வீரர்களை தேர்வுசெய்யும் தகுதிச்சுற்று போட்டிகள் சென்னை வேளச்சேரியில் நடைபெற்றது.
தமிழ்நாட்டு அணித் தேர்வுக்காக கடந்த 3,4,5 ஆகிய நாட்களில் நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டிகளில் Sub-Junior பிரிவில் நடைபெற்ற நீச்சல் போட்டிகளில் திருச்சி SRM அணிசார்பில் கலந்துகொண்ட ஈழத்தமிழ் சிறுமி தனுஜா ஜெயக்குமார் இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கங்களை வென்று தேசிய அளவிலான போட்டிக்கான அணியில் தேர்வாகியுள்ளார்.
100 மீட்டர் Freestyle பிரிவு நீச்சல் போட்டியில் குறித்த தூரத்தை 1:18.69 நேரத்திலும், 50 மீட்டர் Back Stroke பிரிவில் குறித்த தூரத்தை 0:41.90 நேரத்திலும் கடந்து இரண்டாவதாக வந்து இரண்டு வெள்ளிப்பதக்கங்களையும், 50 மீட்டர் Freestyle பிரிவில் குறித்த தூரத்தை 0:34.66 நேரத்தில் கடந்து மூன்றாவதாக வந்து வெண்கப்பதக்கத்தையும் வென்றுள்ளார்.
இதன் மூலம் தமிழ்நாட்டு அணி சார்பிலான Sub-Junior பிரிவில் 50 மீட்டர் Back Stroke, 100 மீட்டர் Freestyle ஆகிய தனிநபர் பிரிவு நீச்சல் போட்டிகளுக்கும் 50×4 மீட்டர் Freestyle தொடர்நீச்சல் பிரிவு போட்டிக்கும் தகுதிபெற்றுள்ளார் தனுஜா.
இலங்கை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக கொண்டு தற்போது தமிழ்நாட்டில் வசித்துவரும் ஈழத்தமிழ் சிறுமி தனுஜா தனது அபார நீச்சல் திறமையினாலும் கடுமையான பயிற்சியினாலும் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார்.
சொந்த நாட்டில் இனப்பகையை முன்னிறுத்தி தமிழர்களுக்கான வாய்புகள் அனைத்து துறைகளிலும் சிங்கள அரசால் திட்டமிட்டே மறுக்கப்பட்டு வரும் நிலையில் புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்துவரும் ஈழத்தமிழர்கள் தமது திறமையினாலும் விடாமுயற்சியினாலும் வெற்றிவாகை சூடி தமிழீழ தேசத்திற்கும் மக்களுக்கும் பெருமையினை தேடித்தந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்தவகையில் தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள தனுஜாவின் தொடர் வெற்றிகளும் எமது தேசத்திற்கும் மக்களுக்கும் பெருமை சேர்க்கிறது.
தமிழ்நாட்டில் உள் அரசியல் தலையீடுகள் மூலம் திறமையும் தகுதியும் இருந்தும் முக்கிய போட்டிகளில் பங்கேற்க முடியாத துயரம் தோய்ந்த வரலாறு விளையாட்டுதுறையையும் விட்டுவைக்கவில்லை. அவற்றையெல்லாம் தனது திறமையின் மூலம் தகர்த்தெறிந்து வெற்றிகளை குவித்துவரும் தனுஜா தேசிய அளவிலான போட்டிகளிலும் வெற்றிபெற வாழ்த்துவோம்.
அகில இந்திய அளவிலான நீச்சல் போட்டிகள் இம்மாத இறுதியில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.