ஆற்றாது அழுத கண்ணீர்
ஆர்பரித்து பொய்கிறதோ…?
இலங்கைத் தீவில்
ஒவ்வொரு மணித்துளியும்
எவராவது ஒரு ஈழத்தமிழனின்
உயிர் புத்தனின் பெயரால்
பறிக்கப்பட்டது.
கடந்து செல்லும்
ஒவ்வொரு மணிதுளியிலும்
ஈழத்தின் எங்கேனுமோர்
மூலை முடுக்கில்
விழிவழியே சுடுநீராக
வடிந்தோடிக்கொண்டிருக்கிறது
எம்மினத்தின் ஆற்றாமை.
இருந்தும்,
ஈராறு மாதங்களில் ‘மே’ மாதம்
வலி சுமந்த மாதமாக
ஈழம் கடந்து
உலகத்தமிழினத்தின்
முகவரியானது.
கையெடுத்துக் கும்பிட்ட
கடவுளரும் கைவிட்ட நிலையில்
எமது மக்களின்
கைகள் நீண்டதும்..
கதறல் ஒலி ஒலித்ததும்…
தாய்த்தமிழகத்தை நோக்கித்தான்.
பத்துக்கோடி தமிழர் வாழ்விற்காய்
ஐம்பது லட்சம் ஈழத்தவர்
முள் முடி தரித்து
துன்பச் சிலுவை சுமக்கையில்
நான்கரை லட்சம்
ஈழத்தவரை காப்பாற்ற..
விடுதலை பெரு நெருப்பின்
கனல் சுமக்கும்
அக்கினிக் குஞ்சுகளைக் காப்பாற்ற..
தாய்த்தமிழகம் தவறியது.
கோபாலபுரத்து கோமானை
கோட்டைக்கு வெளியே
வரவைக்கும் சூட்சுமத்தின்
விதையானான்
‘வீரத்தமிழ் மகன்’ முத்துக்குமார்.
அந்தோ பரிதாபம்..
தமிழுலகம் நம்பிநின்றவர்களே
கோபாலபுரத்து தூதுவர்களாகி
அவனே மூட்டிய தீ தின்றது போய்
மீதமாயிருந்ததையும்
அவசர அவசரமாக எரித்து
சாம்பலாக்கி
முக்கடல் கூடுமிடத்தில்
கரைத்ததுடன்
அணையா நெருப்பாகப்
பற்றியெரிய வேண்டிய விடுதலைத்
தீயையுமல்லவா அணைத்தார்கள்.
கோபாலபுரத்து தூதுவர்களின்
நற்கருணையால்
முள்ளந்தண்டில் அறுவை
நடந்தபோதிலும்
மல்லாந்து படுத்திருந்து
தமிழின அழிப்பை
வேடிக்கை பார்க்க முடிந்தது
முத்தமிழறிஞரால்.
முத்தமிழறிஞரின் நற்காரியத்திற்கான
ஊதியம் 2011 இல் இறயருளால்
கிடைக்கப்பெற்றது.
கூடா நட்பை துறந்த போதிலும்
நற்காரியத்தின் ஊதியம்
2014 இலும் கிடைக்கப்பெற்றது.
இருந்தும்
மிச்ச சொச்சமாய் இருக்கும்
நற்காரியத்தின் ஊதிய மிகுதியை
மொத்தமாக கணக்குத்தீர்த்துவிடும் வகையில் 2016 மே-19 தீர்ப்பு
அமையும் என்பதன் கட்டியமாகவே
ஆற்றாது அழுத கண்ணீர்
ஆர்பரித்து பொய்கிறதோ…?
இரா.மயூதரன்.
தேசத்தை, தேசியத்தை, மொழியை ஆத்மார்த்தமாக நேசித்த ஆத்ம உயிரோட்டம் அனைத்தும் அடங்கி இன்றுடன் ஏழு ஆண்டுகளாகிவிட்டன.
இந்த மீளாத்துயரிலிருந்து எம்மினம் மீளவுமில்லை
இருந்தும் அத்துயரிலிருந்துதான் தத்துவாத்திகளும்,அறிஞர்களும், கலைஞர்களும் உயிர்த்தெழுவர் இது காலத்தின் நியதி. இப்போதே இதற்கான பொறிகள் தோன்றத் தொடங்கிவிட்டன.
எனவே துயில்பவரே அமைதியாக தூங்கும் முள்ளிவாய்க்கால் முடியல்ல என்பது எதிரிக்கு ஒருநாள் புரியும்