கொஸ்கம- சலாவ இராணுவ முகாமில் நேற்று மாலை ஏற்பட்ட வெடிவிபத்தில் சிறிலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவர், பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று மாலை 5.47 மணியளவில், சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கு தொடர்ச்சியான வெடிப்புகள் நிகழ்ந்து கொண்டிருந்தன.
இதனால் எழுந்த தீயை அணைக்க முடியாதளவுக்கு, நெருக்கடி ஏற்பட்டது. தீயணைப்பு குழுவினரோ, மீட்புக் குழுவினரோ இராணுவ முகாமை நெருங்க முடியாதிருந்தது. இதனால், உயிரிழப்புகள் பற்றிய தகவல்களை இராணுவம் வெளியிடவில்லை.
இந்த நிலையில், நேற்று பின்னிரவில் நான்கு இராணுவத்தினர் காயங்களுடன் மீட்கப்பட்டு அவிசாவளை மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களில் ஒருவர் அவிசாவளை மருத்துவமனையில் மரணமானார்.
காயமடைந்தவர்களில் ஒருவர், கண்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனார். அதேவேளை, ஹோமகம மருத்துவமனையிலும் இரண்டு சிறிலங்கா இராணுவத்தினர் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.