“அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” புதிய செயல்த்திட்டம் 2016 இல் சிதம்பராக்கல்லூரி இணைக்கபட்டுள்ளது. நகரப்புற பிரபல்ய பாடசாலைகளில் உள்ள பௌதீக, மானிட, உட்கட்டமைப்பு, சிறந்த பயிற்ச்சியுள்ள ஆசிரியர்கள் போன்ற வசதிகளை சிதம்பராக்கல்லூரியில் வழங்க 30 மில்லியன்கள் வடமாகாண சபை ஒதுக்கியுள்ளது. EDFNS அமைப்பினரால் லண்டனில் நடத்தப்பட்ட வடமாகாணக் கல்வி மகாநாட்டிற்கு வருகை தந்த திரு ராசா இரவீந்திரன் (செயலாளர், கல்வி அமைச்சு, வட மாகாணம்) வல்வை மக்களுடனான சந்திப்பில் இதை உறுதிப்படுத்தினார்.
நகரப்புறங்களில் காணப்படும் முதல்தர பாடசாலைகளில் தமது மாணவர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று பெற்றோர்கள் முண்டியடித்துக் கொண்டு செயல்ப்படுவதனால் அப்பாடசாலைகளில் நெரிசல் தன்மையும் அப் பாடசாலைகளில் எல்லா மாணவர்களையும் சேர்த்துக்கொள்ள முடியாமைனால் பெற்றோர்கள் பெரும் ஏமாற்றமும் விரக்தியும் அடைகின்றனர். நகரப்புற பாடசாலைகளை போன்று கிராமப்புற பாடசாலைகளையும் தரமுயர்த்துதல் அவசியமாகும். அதற்கமைவாக கிராமப்புற பாடசாலைகளை தரமுள்ள பாடசாலைகளாக மாற்றுவதற்கு கல்வி அமைச்சினால் இதற்க்கு முன்பு DSD, நவோதய, இசுரு,1000 பாடசாலைகள் அபிவிருத்தி, மகிந்தோதய என்று பல செயல்த்திட்டங்கள் கிராமப்புற பாடசாலைகளை நோக்கிச்சென்றாலும் அவை எதிர்பார்த்த குறிக்கோள்களையும் அடைவுகளையும் அடையவில்லை. அவைகளை நிபர்த்தி செய்யும் திட்டமாக “அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை“ என்ற புதிய தொனிப்பொருளில் கிராமப்புற பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கே இச்செயல்த்திட்டமாகும்.
நகரப்புற பாடசாலையில் இருக்க வேண்டிய மாணவர்களின் உச்ச எண்ணிக்கை 2000 ஆக குறைத்து 2020 ஆண்டளவில் ஒரு வகுப்பில் இருக்க வேண்டிய மாணவர்களின் எண்ணிக்கையை 35 ஆக மட்டுப்படுத்துவதற்கு தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதே வேளை அருகில் உள்ள சிறந்த பாடசாலை மாணவர் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு ஒவ்வொரு தரத்திலும் இரு பிரிவுகளாக வகுப்புகள் அதிகரிக்கப்பட்டு ஒரு e-library வழங்கப்படும்.