பாடசாலை வளவுக்குள் வருகை தரும்போது மாணவர்களின் தாய்மார் சாரி அணிந்து வர வேண்டும் என பாடசாலை அதிபர்களினால் போடப்பட்டிருந்த சட்டத்தை நீக்கிவிடுமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அரச பாடசாலை அதிபர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோருக்கு சுற்றுநிருபம் அனுப்புமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு உட்பட நகர்ப்புற பாடசாலைகளில் கல்வி பயிலும் பிள்ளைகளின் பெரும்பாலான தாய்மார் தொழில்புரிபவர்களாக காணப்படுகின்றனர். இவர்கள் தங்களது தொழிலின் போது பல்வேறு ஆடைகளை அணிந்து செல்கின்றனர்.
இது இவ்வாறிருக்கையில், பாடசாலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டு செல்ல வேண்டி ஏற்பட்டால், அவர்கள் சிரமங்களுக்கு உட்படுவதாக அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனையடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு கூறியுள்ளது.