அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள், இன்னமும் இதுபோன்ற நெருக்கடிகளைச் சமாளிக்கும் கட்டமைப்பு ஒன்றை இலங்கை உருவாக்கவில்லை என்ற உண்மையைவெளிச்சம் போட்டுக் காண்பித்திருக்கிறது. ஒரே நேரத்தில் மலையகப் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளும், களனி கங்கையில் ஏற்பட்ட பெருவெள்ளமும், இலட்சக்கணக்கான மக்களை உடுத்த உடையுடன் நடுவீதிக்குக் கொண்டு வந்தது.
2004ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் சுனாமி அனர்த்தம் ஏற்படுத்திய பேரழிவுக்குப் பின்னர், இலங்கை சந்தித்த மோசமான இயற்கை அனர்த்தம் இது.
நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக மீட்பது,
அவர்களுக்கு உதவுவது, தேவையான உதவிகளை அளிப்பது என்ற தொடர்
நடவடிக்கைகளைக் கையாளும் விடயத்தில், முப்படைகளும், பொலிசாரும், கணிசமான பங்காற்றியிருந்தனர். இவர்களின் அவசரகால உதவிப்பணிகள் அரச அதிகாரிகளுக்கு கைகொடுப்பதாக அமைந்திருந்தது. ஆனாலும், மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் விடயத்தில் முப்படைகளினதும் செயல்திறன் எந்தளவுக்கு இருந்தது என்ற கேள்வி இருக்கிறது.ஏனென்றால், இந்த அனர்த்தங்களைக் கையாண்ட முறை குறித்த பரவலான விமர்சனங்கள்
வந்து கொண்டிருக்கின்றன.
இயற்கை அனர்த்தங்கள் தவிர்க்க முடியாதவை. அவை மனித சக்திக்கு அப்பாற்பட்டவை. அதனைத் தடுக்க முடியாது. ஆனாலும், அதன் பாதிப்புகளில் இருந்து கூடியளவில் விடுபடலாம் அல்லது பாதுகாப்புத் தேடிக் கொள்ளலாம்.
அனர்த்தங்களை எந்தளவுக்கு வெற்றிகரமாக எதிர்கொள்வது என்பது தான் இந்தக்
காலகட்டத்தின் முக்கியமான தேவையாக மாறியிருக்கிறது. இப்போது அனர்த்தங்களை எதிர்கொள்வதற்குத் தயாராகுதல் என்ற எண்ணக்கரு
உலகளவில் முக்கியமான விடயமாக மாறியிருக்கிறது.ஆனாலும், அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான ஒரு கட்டமைப்பு அவசியம். அவசரகால
அனர்த்தங்களை கையாளுதல் அவ்வளவு இலகுவானதல்ல. ஆனால், நீண்ட போர்ப் பயிற்சிகள், வெளிநாட்டு நிபுணத்துவப் பயிற்சிகள், உதவிகளைக் கொண்டிருந்த போதிலும், முப்படைகளினதும் அனர்த்த மீட்புச் செயற்பாடுகள் மெச்சிக் கொள்ளத்தக்க வகையில் இருக்கவில்லை.
2004ஆம் ஆண்டு டிசெம்பர் 26ஆம் திகதி தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளைப்புரட்டிப் போட்ட சுனாமி அனர்த்தம் ஏற்பட்டிருந்தது. அதற்கு முன்னர், சுனாமி என்ற சொல்லையே இலங்கை மக்கள் அறிந்திருக்கவில்லை. அதன் பாதிப்பு எத்தகையது என்றும் கேள்விப்பட்டதில்லை. குமரிக் கண்டத்தைக் கடற்கோள் ஒன்று காவு கொண்டதான வெறும் வரலாற்றுத் தகவல்
தான் இருந்தது. அந்தக் கடற்கோள் எப்படியிருக்கும், எப்படித் தாக்கும் என்றெல்லாம் தெரிந்திருக்கவில்லை.அதனால் தான், சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட போது, அதனை எப்படி மக்களுக்கு எடுத்துச் சொல்வது என்று தெரியாமல் அச்சு, இலத்திரனியல் ஊடகங்கள் திண்டாடின. பல நாளிதழ்கள் கடற்கொந்தளிப்பு என்று எழுதின. இன்னும் சில கடல் பெருக்கெடுப்பு
என்று எழுதின. ஆனாலும், அதன் பாதிப்பின் கனபரிமாணங்களைச் சரியாகச் சொல்லக் கூடிய ஒற்றைச் சொல் மக்களுக்கும் தெரிந்திருக்கவில்லை. ஊடகங்களும் அறிந்திருக்கவில்லை. பின்னர் தான், சுனாமி என்ற சொல் அறிமுகமானது, அந்த ஜப்பானியச் சொல்லுக்கு ஈடாகஆழிப்பேரலை என்ற தமிழ்ச் சொல் அறிமுகமானது. சிலர் அது தான் கடற்கோள் என்றும்
குறிப்பிடுகின்றனர்.எவ்வாறாயினும், சுனாமி என்ற சொல் இன்று எல்லா மட்டங்களிலும் தெரியக்கூடிய ஒரு பேரழிவின் குறியீட்டுச் சொல்லாக மாறியிருக்கிறது. 2004இல் சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட போது. இலங்கையின் பெரும்பாலான கடலோரப் பகுதிகள் பேரழிவுப் பிரதேசங்களாக மாறின. அப்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கு, கிழக்கின் பெரும்பாலான கடலோரப் பகுதிகளில், மிகவேகமாக மீட்புப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதுபோன்ற வேகத்தில் நாட்டின்
ஏனைய பகுதிகளில் மீட்புப்பணிகள் முன்னெடுக்கப்படவில்லை. நாட்டின் பிறபகுதிகளில் மீட்பு உதவிப் பணிகளுக்கு அமெரிக்க கடற்படையினர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கடற்படையினரும், உதவிக்குழுக்களும் வந்தன.
ஆனால், வடக்கிலும் கிழக்கிலும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், குறைந்தளவு வளங்களையும் வசதிகளையும் கொண்டு புலிகளால் மட்டுமே முன்னெடுக்கப்பட்ட மீட்பு நிவாரணப் பணிகளை சர்வதேசமே வியந்து பாராட்டியது. அவசர நிலைகளை எதிர்கொள்வதற்கேற்ற முன்னாயத்தங்களும், பயிற்சியும், சுனாமிக்குப் பின்னர், மீட்புப் பணிகளை விரைவாக முன்னெடுப்பதற்கு விடுதலைப் புலிகளுக்கு உதவியிருந்தது. அதைவிட, தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தொடர்ச்சியாக மக்களின்
இடம்பெயர்வுகளைச் சமாளித்துப் பழகிப்போனதும் அவர்களுக்கு இந்த விடயத்தில்கைகொடுத்தது.
எனினும், இலங்கையின் முப்படைகளிடம், புலிகளை விட அதிகளவு வசதிகளும்
வளங்களும் இருந்தபோதும், அவர்களுக்கு ஈடாக, துரிதமான மீட்புப்பணிகளை
முன்னெடுக்க முடியாதிருந்தது.2004ஆம் ஆண்டை விட இப்போது முப்படையினருக்கான பயிற்சிகள் அதிகம், வசதிகள் அதிகம். போதிருந்தளவுக்கு பாதுகாப்பு ரீதியான நெருக்கடிகளும் இல்லை. ஆனாலும்,அவசர ட்புப்பணிகளை முப்படைகளாலும், துரிதமாக ஈடபட முடியாத நிலை காணப்பட்டது.
இந்தளவுக்கும், பல்வேறு நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, இந்தியா உள்ளிட்டவை
இலங்கைப் படைகளுக்கு அனர்த்த மீட்பு தொடர்பான அதிகளவு பயிற்சிகளை
அளித்திருக்கின்றன. அந்தப் பயிற்சிகள் இலங்கைப் படையினருக்கு எந்தளவுக்கு
கைகொடுத்திருக்கின்றன என்ற கேள்வி இருக்கிறது.
இலங்கை அதிகளவில் இயற்கை அனர்த்தங்களைச் சந்திக்காத நாடாக இருந்தாலும், அனர்த்த கால முன்னாயத்தங்களை மேற்கொள்வதில் அவ்வளவாக கரிசனை காட்டுவதில்லை. 2004ஆம் ஆண்டுக்குப் பின்னர், அவ்வப்போது, ஆண்டுக்கு ஒரு முறை சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகைகளை மேற்கொள்வதுடன் எல்லாம் சரி. நிலச்சரிவுகளை சமாளித்தல், நிலச்சரிவு பிரதேசங்களில் மீட்புப்பணிகளை எவ்வாறு முன்னெடுத்தல், அதற்குத் தேவையான கருவிகளை தயார்படுத்தல், என்பனவற்றில் அதிகம்
கவனம் செலுத்தப்படவில்லை. அரநாயக்கவில் நிலச்சரிவு மீட்புப்பணிகளில் இராணுவத்தினர் கொமாண்டோக்களையும்படையினரையும் ஈடுபடுத்தியிருந்தனர். ஆனால் அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட
படையினர், அங்கு என்ன செய்வதென்று தெரியாமல், எப்படி மீட்புப்பணிகளை
முன்னெடுப்பது என்று தெரியாமல், விழித்துக் கொண்டிருந்ததை காணமுடிந்தது.
காரணம், போதிய பயிற்சியின்மை. எந்த அனர்த்தங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்றபயிற்சி முக்கியமானது. அந்தப் பயிற்சி இலங்கைப் படையினருக்கு இருக்கவில்லை.
நிலச்சரிவு ஒன்று ஏற்பட்டால், எவ்வளவு விரைவாக எந்த முறையில் மீட்புபணிகளைமுன்னெடுக்கலாம் என்ற எந்த திட்டமும் இன்றியே மீட்புப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மிகப்பெரிய இராணுவக் கட்டமைப்பை வைத்திருக்கும் இலங்கை, அதனை பயனுள்ளவகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். போர்க்காலத்தில் தனியே போர்க்களஉத்திகளை மட்டுமே பயிற்றுவிக்கப்பட்ட படையினரால் அனர்த்தங்களை சமாளிப்பதுஎளிதான விடயமல்ல.அண்மைய அனர்த்தங்களின் பின்னர் தான், முப்படைகளையும், தேவையான கருவிகள்
மற்றும் வாகனங்களையும் கொண்ட அனர்த்த மீட்பு படை ஒன்றை உருவாக்க
வேண்டியதன் அவசியம், அரசாங்கத்தினால் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் அனர்த்த மீட்பு படைப்பிரிவு ஒன்று உருவாக்கப்படும் என்றும்,இதில் முப்படையினர் மற்றும் தேவையான வாகனங்கள், படகுகள், விமானங்களும் சேர்க்கப்படும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.
பெரியதொரு பாடத்தைக் கற்றுக் கொண்ட பின்னர் தான் அரசாங்கம் இந்த முடிவுக்கு வந்திருக்க வேண்டும். 2004இல் சனாமிக்குப் பின்னர் இலங்கை இந்த படைப்பிரிவைஉருவாக்கியிருக்க வேண்டும்.
ஆனால், போரை மட்டுமே வெற்றி கொள்வதில் குறியாக இருந்த அரசாங்கமும் சரி, படையினரும் சரி அதுபற்றி யோசிக்கவேயில்லை. இப்போது காலம் தாழ்த்தியேனும் இந்த முடிவுக்கு அரசாங்கம் வந்திருக்கிறது.