Thursday , 9 January 2025
Lorem Ipsum
Home » All » News » அம்பாந்தோட்டையில் சீனாவின் கடற்படைத் தளம்- ஜப்பானிய தளபதி எச்சரிக்கை

அம்பாந்தோட்டையில் சீனாவின் கடற்படைத் தளம்- ஜப்பானிய தளபதி எச்சரிக்கை

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் கடற்படை நடவடிக்கைகள் விரிவடைந்து வருவது குறித்து ஜப்பானிய கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் கட்சுரோஷி கவானோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ சீனக் கடற்படை தளது நடவடிக்கைகளை உறுதியாக விரிவுபடுத்தி வருகிறது.

இந்தியாவைச் சுற்றி கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக சீனா தனது நிதியை முதலீடு செய்து வருகிறது.  பிராந்தியத்தில் தனது இராணுவத் தளங்களின் வலையமைப்பை உறுதியாக விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறது.

சீனாவின் கடற்படை விரிவாக்க மூலோபாயத்துக்கு உதவும் கட்டமைப்புகளுக்கு உதாரணமாக, பாகிஸ்தானின் குவடார் துறைமுகம், சீனாவின் முதலீட்டுடன் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஓகஸ்ட் மாதம் டிஜிபோட்டியில்,  சீனாவின் முதலாவது கடல் கடந்த கடற்படைத் தளம் திறக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் அம்பாந்தோட்டை துறைமுகம், 99 ஆண்டு குத்தகைக்காக சீனாவுக்கு கடந்த டிசெம்பரில் வழங்கப்பட்டுள்ளது.

டிஜிபோட்டியில் உள்ள சீன கடற்படைத் தளம் இந்தியப் பெருங்கடலில், அந்த நாட்டின் கடல் நடவடிக்கைகளுக்கு வெளிப்படையாகவே உதவியாக இருக்கும்.

மெடிட்ரேரியன் கடலைச் சுற்றிய பகுதிக்கு இலகுவாகச் சென்றடையும் வகையில், சீன கடற்படை தனது செயற்பாடுகளை உறுதியாக விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறது.

அம்பாந்தோட்டை துறைமுகம் ஒரு வர்த்தக கட்டுமானமே என்று சிறிலங்காவும், சீனாவும் கூறுகின்றன.

ஆனால், 99 ஆண்டு குத்தகை என்பது சீனாவின் இராணுவ முன்னெடுப்புக்கான காத்திரமான நகர்வாகவே மாற்றியுள்ளது.

சீனா தனது கடல் கடந்த இரண்டாவது தளத்தை தெற்காசியாவில் அம்பாந்தோட்டையில் கட்டியெழுப்பினால், சீன கடற்படையின் ஆற்றல்கள் புதிய மட்டங்களுக்கு அதிகரிக்கக் கூடும்.

இத்தகைய விநியோக வசதிகளை பயன்படுத்தினால், சீனக் கடற்படைக் கப்பல்கள்  தமது நாட்டுக்குத் திரும்பாமல் நீண்ட காலத்துக்கு இந்தியப் பெருங்கடலில் தங்கியிருக்க முடியும்.

சீனா தனது அணுசக்தி நீர்மூழ்கிகள் மற்றும் கடற்படைக் கப்பல்களை அண்மைய ஆண்டுகளாக இந்தியப் பெருங்கடலில் தொடர்ச்சியாக நிறுத்தி வருகிறது.

எமது முக்கியமான கப்பல் பாதைகள் இந்திய பெருங்கடல் மற்றும் தென் சீனக்கடல் வழியாகவே இருக்கின்றன.

இந்தப் பிராந்தியத்தில் சீனாவின் கடற்படை விரிவாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில், அமெரிக்கா, அவுஸ்ரேலியா, இந்தியா ஆகிய நாடுகளுடன் ஜப்பான் இணைந்து பணியாற்றும்.

தற்போதுள்ளது போன்ற சீனாவின் இராணுவ செலவின விரிவாக்கம், தொடர்ந்தால், ஜப்பான் தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்ளும். அந்தச் சூழலைக் கணிக்க முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *