Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » அமைதித் தீர்வுக்கு கூட்டாட்சி மாத்திரமே ஒரே வழி – விக்னேஸ்வரன் செவ்வி

அமைதித் தீர்வுக்கு கூட்டாட்சி மாத்திரமே ஒரே வழி – விக்னேஸ்வரன் செவ்வி

நாட்டில் நிலவும் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நிலையான நீதி மற்றும் நிலையான அமைதித் தீர்வு எட்டப்படுவதற்கு கூட்டாட்சி மாத்திரமே ஒரேயொரு வழி என வடக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கடந்த பதினெட்டு மாதங்களாக சிறிலங்காவில் ஆச்சரியப்படத்தக்க சில அரசியல் மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. ஜனவரி 2015ல், நீண்ட ஆண்டுகளாக நாட்டின் அதிபராக இருந்த மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாகவும் அதிபராக வரும் எண்ணத்துடன் நடத்திய அதிபர் தேர்தலில் எதிர்பாராத வகையில் தோல்வியுற்றார். இதன் பின்னா கூட்டணிக் கட்சிகளுடன் புதிய அரசாங்கம் ஆட்சியை அமைத்துக் கொண்டது.

ஆழமான சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டாலும் கூட இக்கூட்டணி அரசாங்கமானது சரியான திசையில் நாட்டை வழிநடத்திச் செல்வதற்கான சில நகர்வுகளை மேற்கொண்டன. இந்தவகையில், நாட்டின் தற்போதைய விவகாரங்கள், தமிழ் அரசியல், மேலும் கருத்துள்ள மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான வழிமுறைகள், அனைத்துலக சமூகத்திடமிருந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நீடித்து நிலைத்து நிற்பதற்கான சில தேவைகள் போன்றன தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது கருத்துக்களை நேர்காணல் மூலம் பதிவு செய்துள்ளார்.

இந்த நேர்காணலின் முழுவடிவம் வருமாறு:

கேள்வி: மைத்திரிபால சிறிசேன 2015 ஜனவரி மாதம் சிறிலங்காவின் புதிய அதிபராகப் பதவியேற்ற பின்னர், வடக்கு மாகாணத்தில் வாழும் மக்களுக்காக ஏதாவது செய்யப்பட்டுள்ளதா?

பதில்: வடக்கில் மட்டுமல்லாது, நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் முன்னரை விடத் தற்போது ஜனநாயக ஆட்சி இடம்பெறுகிறது. எனினும் மதிப்பிற்குரிய திரு.சிறிசேன மற்றும் அவரது அரசாங்கத்தால் வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும், வடக்கு மாகாண மக்களின் எதிர்பார்ப்புக்கள் இன்னமும் முழுஅளவில் நிறைவேற்றப்படவில்லை. சிறிலங்கா இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள் மக்களிடம் மீளவும் கையளிக்கும் நிகழ்வு மிக மெதுவாக இடம்பெறுகின்றது. விடுவிக்கப்பட்ட நிலங்களில் கூட முழுமையான மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை. தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிய மக்கள் மத்தியில் இராணுவத்தினரின் பிரசன்னம் தற்போதும் அதிகம் காணப்படுகின்றது.

மத்திய அரசாங்கத்தின் மேலாதிக்க மனோநிலை தற்போதும் தொடர்கிறது. வடக்கிற்காக திட்டங்கள் தயாரிக்கப்படும் போது அவை தொடர்பாக மாகாண நிர்வாகத்துடன் எந்தவொரு கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்படுவதில்லை. எப்போதும் மத்திய அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குச் சாதகமாகவே திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் ஏனைய மாகாணங்களுக்கான திட்டங்கள் தயாரிக்கப்படும் போது அந்தந்த மாகாண சபைகளுடன் கலந்துரையாடப்பட்டே தயாரிக்கப்படுகின்றன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இதற்கு விதிவிலக்காக உள்ளன.

நாங்கள் இனத்தால் வேறுபட்டவர்கள். எமது கட்சி வேறுபட்டது. நாங்கள் வேற்று மொழியைப் பேசுகிறோம். எமது கலாசாரம் வேறுபட்டது. இவ்வாறான காரணங்களுக்காக மத்திய அரசாங்கமானது எம்மீது தனது மேலாதிக்கத்தைச் செலுத்தக் கூடாது. இதற்காகவே 1987 இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு அமைவாக எமக்கான அதிகாரங்களைப் பகிர்ந்து தருமாறு நாங்கள் கோரிக்கை விடுத்திருந்தோம். இத்தீவு முழுவதிலும் மாகாண சபை முறைமை நிறைவேற்றப்பட்டது. இதன் விளைவாக, எமது உரிமைகள், அவாக்கள் மற்றும் எமது பிரச்சினைகள் கவனத்திற் கொள்ளப்படாது புறக்கணிக்கப்பட்டன.

கேள்வி: வடக்கில் நிலவும் இராணுவமயமாக்கலின் விளைவுகள் என்ன?

பதில்: உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னரும் தொடர்ந்தும் வடக்கில் இராணுவத்தினர் பிரசன்னமாகியுள்ளதால் எமது மக்களின் நாளாந்த வாழ்வானது மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எமது மக்களுக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலப்பரப்பில் சிறிலங்கா இராணுவத்தினர் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதுடன் அதில் விளையும் பயிர்களை சந்தைகளில் விற்பனை செய்து வருமானம் ஈட்டுகின்றனர். இதுவரை நில உரிமையாளர்களுக்கு எவ்வித இழப்பீடுகளும் வழங்கப்படவில்லை. தமது காணிகளை இழந்த எமது மக்கள் தொடர்ந்தும் இடம்பெயர்ந்தோர் முகாங்களில் வாழ்கின்றனர். இந்த முகாம்களில் வாழும் மக்களுக்கு சிறிலங்கா அரசாங்கத்தால் போதியளவு வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்த மக்களுக்கு வடக்கு மாகாண சபையானது சில உதவிகளை வழங்கியுள்ளது.CM-WIGNESWARAN

இதேபோன்று வியாபார நடவடிக்கைகளிலும் சிறிலங்கா இராணுவத்தினர் ஈடுபடுகின்றனர். அத்துடன் வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் உணவகங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளையும் நடத்துகின்றனர். இதுமட்டுமல்லாது, தெற்கிலுள்ள மீனவர்கள் சட்ட ரீதியற்ற முறையில் வடக்கில் மீன்பிடிப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ள அதேவேளையில் எமது மீனவர்கள் அவர்களின் பாரம்பரிய நீர்நிலைகளில் மீன்பிடிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வடக்கு மாகாண சபைக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரமே வழங்கப்பட்டுள்ளது.

தற்போதும் எமது மக்களுக்குச் சொந்தமான நிலங்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் அவர்களது தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. வடக்கிலுள்ள பெண்களின் குறிப்பாக கணவனை இழந்த பெண்கள் மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் பாதுகாப்பானது ஆபத்திற்கு உள்ளாகியுள்ளது. உள்ளுர் அதிகாரிகளிடம் அனுமதி பெறாது புத்தர் சிலைகள் மற்றும் விகாரைகள் போன்றன வடக்கில் கட்டப்படுகின்றன. இவை அனைத்தும் எந்தவொரு பௌத்தர்களும் வாழாத இடங்களில் சிறிலங்கா இராணுவத்தினரின் உதவியுடன் அமைக்கப்படுகின்றன. இராணுவத்தினர் பொதுமக்களின் விவகாரங்களில் தலையீடு செய்கின்றனர். வடக்கிலுள்ள சில பாடசாலைகள், பொதுக் கட்டடங்கள், விளையாட்டு மைதானங்கள் போன்றன தொடர்ந்தும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பொதுமக்களிடம் கையளிப்பதற்கான எந்தவொரு நகர்வும் முன்னெடுக்கப்படவில்லை.

கேள்வி: இனப் பிரச்சினை தொடர்பில் நிலையான நீதி மற்றும் அரசியற் தீர்வை எட்டுவது தொடர்பில் தங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு அடுத்த மூன்று தொடக்கம் ஆறு மாதங்களில் கூட்டணி அரசாங்கமானது எவ்வாறான நகர்வை முன்னெடுக்க முடியும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில்: இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கமானது தீவிர அக்கறை கொண்டிராத போது இவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுக்க முடியும்? ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத்தொடருக்கான நாட்கள் நெருங்கி வரும் நிலையில் தற்போது சிறிலங்கா அரசாங்கமானது கவலை கொள்ளத் தொடங்கியுள்ளது. மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர் ஆணையாளரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான எந்தவொரு நகர்வையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் வழங்கப்பட்ட உறுதிப்பாடானது முற்றிலும் நிறைவேற்றப்படவில்லை.

உண்மையில் அரசாங்கம் எமது பிரச்சினையைத் தீர்ப்பதில் தீவிர அக்கறை கொண்டிருக்குமானால், வடக்கு மாகாண சபையால் முன்வைக்கப்பட்ட தேசியப் பிரச்சினைக்கான தீர்வை நிறைவேற்ற வேண்டும். அதாவது அரசியல் யாப்பானது வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் அடையாளங்கள் மற்றும் உரிமைகளை அங்கீகரிக்கக் கூடிய கூட்டாட்சி முறைமையை ஏற்றுக் கொள்ளும் போது மட்டுமே எமது தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்படும். அனைத்துலக சமூகத்தின் பங்களிப்புடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கான அனுமதியை சிறிலங்கா அரசாங்கம் வழங்க வேண்டும். பொறுப்புக்கூறல் பொறிமுறையை உறுதிப்படுத்துவதற்கும் அனைத்துலக சமூகத்திற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.

கேள்வி: அரசியற் தீர்வொன்றை உருவாக்குவதற்கு எவ்வாறான வழிமுறை கைக்கொள்ளப்பட வேண்டும்? அதாவது கூட்டாட்சி முறைமை அமுல்படுத்தப்பட வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: கூட்டாட்சி முறைமை மட்டுமே இதற்கான ஒரேயொரு வழியாகும். வடக்கு கிழக்கில் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் தமிழ் மக்களின் வரலாற்று சார் வாழ்விடங்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். இது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கமானது ஏதாவது சந்தேகம் கொண்டிருந்தால் அனைத்துலக சமூகத்தைச் சேர்ந்த வரலாற்று வல்லுனர்களிடமிருந்து ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறானதொரு ஆலோசனை பெறப்படுமிடத்து சிங்கள மக்கள் மத்தியில் நிலவும் தமிழ் மக்கள் தொடர்பான பிழையான கருத்தியல்கள் நீக்கப்படும். நாங்கள் எமது அடையாளங்கள், தனித்துவங்கள் மற்றும் எமக்கான சிறப்புக்களைப் பேணிப்பாதுகாக்க விரும்புகிறோம்.

கேள்வி: அண்மையில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் என்ற வகையில், பேரவை தொடர்பான கருத்துக்களை எம்முடன் பகிர்ந்து கொள்வீர்களா?

பதில்: தமிழ் மக்கள் பேரவையானது வடக்கு கிழக்கைச் சேர்ந்த புலமைவாதிகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ள சிவில் அமைப்பாகும். இவர்கள் அடிமட்ட மக்களுடன் தொடர்பைப் பேணுவதால் மக்களின் அவாக்களை நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர். ஒரு நிறுவனத்தின் வேலையற்ற ஒரு இயக்குனர் போன்றே நான் செயற்படுகிறேன். நான் இப்பேரவையின் இணைத் தலைவராக உள்ள போதிலும், சில தெரிவு செய்யப்பட்ட கூட்டங்களுக்கே நான் அழைக்கப்படுகிறேன். நான்கு மாதங்களின் பின்னர் கடந்த வாரம் பேரவையில் உரையாற்றுவதற்காக நான் அழைக்கப்பட்டேன். இப்பேரவையின் நாளாந்தக் கலந்துரையாடல்களில் நான் பங்களிப்பதில்லை.

கேள்வி: தமிழ் மக்கள் பேரவை மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இடையிலான தொடர்பு எவ்வாறு அமைந்துள்ளது?

பதில்: தமிழ் மக்கள் பேரவையானது பிறிதொரு அரசியல் அமைப்பாகத் தோற்றம் பெற்றுள்ளதாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கருதியது. இதனால ஆரம்பத்தில் பேரவையின் உருவாக்கத்தை கூட்டமைப்பு எதிர்த்தது. ஆனால் தற்போது இது ஒரு ஆதரவு அமைப்பு என்பதையும் தேர்தலில் ஆர்வங்காண்பிக்காத ஒரு சிவில் அமைப்பு என்பதையும் கூட்டமைப்பு உணர்ந்து கொண்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் தமிழ் மக்கள் பேரவைக்கும் இடையிலான உறவுநிலையானது வரவேற்கத்தக்க முறையில் அமைந்துள்ளது.

கேள்வி: தாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று புதிய அரசியற் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக இவ்வாண்டின் ஆரம்பத்தில் அறிக்கைகள் வெளியிடப்பட்டன. இது உண்மையா? அவ்வாறெனின், கூட்டமைப்பிலிருந்து வெளியேறத் தீர்மானித்தற்கான அடிப்படைக் காரணங்கள் என்ன?

பதில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதற்கான எவ்வித காரணங்களும் இல்லை. மறைமுக நிகழ்ச்சி நிரல்களைக் கொண்டுள்ள சிலரே இவ்வாறான கட்டுக்கதைகளை உருவாக்கியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

கேள்வி: தமிழ் சமூகத்திற்கு உதவுவதற்கு அனைத்துலக சமூகத்தால் எவ்வாறான பங்களிப்பை வழங்க முடியும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில்: நிறைய உள்ளது. முதலாவதாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் முன்னெடுக்கப்படும் பொறுப்புக்கூறல் செயற்பாடுகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என அனைத்துலக சமூகமானது அழுத்தம் கொடுக்க வேண்டும். இரண்டாவதாக, பிராந்திய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு கூட்டாட்சி மாத்திரமே ஒரேயொரு தீர்வு என்பதை சிறிலங்கா அரசாங்கத்திற்கு புரிய வைப்பதற்கான முயற்சிகளை அனைத்துலக சமூகம் முன்னெடுக்க வேண்டும். கியூபெக் மாநிலமானது கனடாவை விட்டுப் பிரிந்து செல்லாது அதன் மாநிலமாக இருப்பதற்கு விரும்பியமைக்கு கூட்டாட்சிக் கோட்பாடு மட்டுமே காரணம் என்பதை அனைத்துலக சமூகமானது சிறிலங்கா அரசாங்கத்திடம் விளக்கமாகக் கூறவேண்டும். இதேபோன்று ஸ்கொட்லாந்து மற்றும் பிரித்தானியா போன்றனவும் செயற்படுகின்றன. மூன்றாவதாக, போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எமது மாகாண சபையின் ஊடாக இறுக்கமான நிதித் திட்டங்களையும் முன்னெடுப்பதற்கு போதியளவு நிதி வழங்கப்படுவதை அனைத்துலக சமூகமானது உறுதிப்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, சிலவேளைகளில் 100 ரூபா ஒதுக்கப்படும் போது அதில் 20-25 ரூபாக்கள் மட்டுமே மக்களின் நலன்களுக்காக செலவிடப்படுகின்றன. மீதி ‘நிர்வாகச்’ செலவுகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

கேள்வி: அரசியற் தீர்வொன்று எட்டப்படும் போது அதில் இந்தியாவின் பங்களிப்பு உள்ளீர்க்கப்பட வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களா?

பதில்: பலமானதொரு பங்களிப்பு. சிறிலங்காவின் அரசியல் யாப்பில் 13வது சீர்திருத்தத்திற்கு வழிவகுத்த 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் இந்தியாவானது தமிழர் பிரச்சினையைப் பிரதிநிதித்துவப்படுத்தியது என்பதை மறக்கக் கூடாது. இந்தியாவானது எமது தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் அவாக்களை அடையாளம் காண்பதுடன் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சிங்கள அரசியல்வாதிகளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும். ஒருபுறம் ஒதுங்கி நின்றவாறு எமது நாட்டில் நடைபெறும் மாற்றங்களை அவதானிப்பதில் பயன் எதுவுமில்லை.

வழிமூலம்            – The wire
செவ்விகண்டவர் – TAYLOR DIBBERT
மொழியாக்கம்     – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *