தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஒருபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை எனவும் ஆனால் நாட்டில் நிலையான தீர்வை எட்டுவதற்கு தமிழ் மக்களின் தனிப்பட்ட அடையாளங்களையும் அங்கீகரிக்க வேண்டும் என்பது சிறிலங்கா அரசாங்கத்தின் கடமையாகும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சிறிலங்காவின் வடக்கிற்குப் பயணம் செய்த ஐ.நாவிற்கான அமெரிக்காவின் தூதுவர் சமந்தா பவர் தனது அரசாங்கத்தின் பூகோள அரசியல் நலன்களின் மீதே அதிகம் கவனம் செலுத்துவதாகவும், ஆனால் நோர்வே நாடானது தமிழ் மக்களின் துன்பங்களை நன்கு புரிந்துள்ளதாகவும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சண்டே ஒப்சேவர் ஊடகத்திற்கு மின்னஞ்சல் மூலம் சி.வி.விக்னேஸ்வரன் நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். இதில் இந்தியாவின் தமிழ்நாட்டு முதலமைச்சர் தொடர்ந்தும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஆதரவாக இருந்து வருகின்ற போதிலும், இவர் மூலம் தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வொன்று பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் எனத் தான் கெஞ்சவில்லை என விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேர்காணலின் முழுவடிவம் வருமாறு:
கேள்வி: வடக்கில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் தொடர்பாக கொழும்பிலுள்ள அரசாங்கத்துடன் ஆலோசிக்கத் தவறியதாக தங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு முரண்பாடு தோற்றுவிக்கப்படுவதற்கு முன்னர், தாங்கள் ஏன் சிறிலங்கா அதிபர், பிரதமர் மற்றும் அமைச்சரவையுடன் பேச்சுக்களை நடாத்தவில்லை?
பதில்: நான் இது தொடர்பாக இவ்வாண்டு பெப்ரவரி 15 அன்று பிரதமரிடம் தெரியப்படுத்தியிருந்தேன். இது தொடர்பாக நாட்டின் அதிபர் மற்றும் பல்வேறு அமைச்சர்களுடனும் தொடர்பை ஏற்படுத்தியிருந்தேன். நாட்டின் மத்திய அரசாங்கத்தில் பாரம்பரியமாக இருந்து வரும் அதிகாரத்துவ ஆட்சி தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்திலும் இடம்பெறுகிறது. இதனை இவர்களால் மாற்ற முடியவில்லை.
கேள்வி: வடக்கு மாகாண சபையின் அடிப்படைப் பணி வடக்கை நிர்வகித்தலும் அதனை அபிவிருத்தி செய்தலும் ஆகும். தங்களது தலைமையின் கீழுள்ள வடக்கு மாகாண சபையில் இந்தக் கடமைகள் நிறைவேற்றப்படவில்லை என முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பான தங்களின் பதில் என்ன?
பதில்: தமது சொந்த அரசியல் நலன்களைப் பற்றி மட்டும் கதைக்கின்ற பலர் உள்ளனர். நாங்கள் எமது கடமைகளிலிருந்தும் பொறுப்புக்களிலிருந்தும் தவறவில்லை. அவற்றை நாம் நிறைவேற்றி வருகிறோம். எமது நட்பு நாட்டின் பிரதேச சபை ஒன்றுடன் இரட்டை நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக கைச்சாத்திடுவது தொடர்பில் நான் கடந்த ஆண்டு நவம்பர் 04 அன்று எமது மத்திய அரசாங்க அதிகாரிகளிடம் அனுமதி கோரியிருந்தேன். இந்த இரட்டைத் திட்டம் மூலம் வடக்கு மாகாண சபையும் அதேவேளையில் குறித்த நாட்டின் உள்ளுர் அதிகார சபையும் நன்மை பெற முடியும். ஆனால் இன்றுவரை இதற்கான எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை. பல மாதங்களின் பின்னர், இது தொடர்பில் தான் உதவுவதாக பிரதமர் எம்மிடம் தெரிவித்திருந்தார். தற்போது இத்திட்டம் தொடர்பான பேச்சுக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. நாங்கள் பாடசாலை மாணவர்களாக இருந்தபோது ஆசிரியரால் அழைக்கப்படும் எமது சக மாணவன் ஆசிரியரிடம் செல்வதைத் தடுப்பதற்காக அவனைப் பின்னால் இறுகப் பற்றிப் பிடிப்போம். அப்போது சிலர் குறித்த மாணவன் ஆசிரியரை மதிக்கத் தவறுவதாக குற்றம் சாட்டுவார்கள். இது போன்றே எமது நிலைப்பாடும்.
கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருடனான தங்களது உறவில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையானது கூட்டமைப்பிற்குள் பிளவு ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என நீங்கள் கருதுகிறீர்களா?
பதில்: இது தவறான கருத்தாகும். ஏனெனில் திரு.சம்பந்தன், திரு.மாவை சேனாதிராஜா, திரு.சுரேஸ் பிறேமச்சந்திரன், திரு.அடைக்கலநாதன் மற்றும் திரு.சித்தார்த்தன் போன்றவர்களுடன் நான் நல்லதொரு உறவைப் பேணி வருகிறேன். ஊடகங்கள் தவறான கருத்துக்களைப் பரப்ப முயல்கிறார்கள். ஆகவே இதற்கு நான் ஒத்தாசை வழங்க முடியாது.
கேள்வி: முதலமைச்சர் என்ற வகையில் வடக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குத் தாங்களே பொறுப்பாக உள்ளீர்கள். இந்நிலையில் தமிழ் மக்கள் பேரவை என்கின்ற தனித்த அமைப்பிற்குத் தலைமை தாங்குவதன் காரணம் என்ன?
பதில்: தொழில் சார் வல்லுனர்கள் மற்றும் ஏனையோர்களை உள்ளடக்கிய ஒரு மக்கள் அமைப்பாகவே தமிழ் மக்கள் பேரவை செயற்படுகிறது. இவர்கள் வடக்கு கிழக்கு மக்களின் மனங்களையும் அவர்களின் அவாக்களையும் வெளிப்படுத்துகின்றார்கள். நான் தமிழ் மக்கள் பேரவையை உருவாக்கவில்லை. அதற்கு நான் ஆதரவு வழங்கினேன். அரசியற் கட்சிகள் எம்மை குறுகிய வட்டத்திற்குள் கட்டிப்போட்டன. ஆகவே இதிலிருந்து வெளியேறி சுதந்திரமாகச் செயற்பட வேண்டும் என்பதே எமது விருப்பாகும். இதன் மூலம் தேசிய மற்றும் அனைத்துலக சமூகத்துடன் மேலும் இதயசுத்தியுடன் தொடர்பைப் பேணி எமது பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். அதற்கான தகுந்த காலம் இதுவாகும். இதுபோன்றே எமது நாட்டின் அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோர் வௌ;வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும் ஒருமித்து நாட்டை ஆட்சி செய்து வருகிறார்கள்.
கேள்வி: தமிழ் மக்களின் நீதி மறுக்கப்படுவதற்கு மேற்குலகமும் உள்ளுர் தமிழ்த் தலைவர்களும் காலாக இருப்பதாக அண்மையில் தமிழ் மக்கள் பேரவை குற்றம் சுமத்தியிருந்தது. இத்தகைய குற்றச்சாட்டானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரானது இல்லையா? இக்குற்றச்சாட்டிற்கு நீங்களும் பொறுப்பாளியா?
பதில்: இவ்வாறானதொரு கூற்றை நான் அறியவில்லை. இக்குற்றச்சாட்டானது எமது மக்களின் கருத்தாக இருக்கலாம். ஏனெனில் தமிழ் மக்கள் பேரவையானது மக்களின் நிறுவனமாகும். குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்படும் போது முதலில் இவ்வாறான குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மையை ஆராய வேண்டும். குறித்த ஒருவரின் நலன்களைப் பாதுகாப்பதற்கு விரைந்து செல்வதை விட இதனை முதலில் ஆராய்வதே புத்திசாலித்தனமான செயலாகும்.
கேள்வி: தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் எனக் கூறப்படும் நிலையில், கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்த சூழல் மீண்டும் ஏற்பட இடமளிக்கப்படுமா?
பதில்: எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுத் தருமாறு நான் எப்போது ஜெயலலிதாவைக் கோரினேன்? நான் அவரை வாழ்த்தியதுடன், இன்னமும் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டும் எனவும் கோரியிருந்தேன். அவர் அதற்கு சாதகமாகப் பதிலளித்தார். இதனை வேறு அர்த்தத்தில் புரிந்து கொண்டால் அது எனது தவறல்ல.
கேள்வி: தாங்கள் ஜெயலலிதாவை வாழ்த்தி அனுப்பிய செய்தியானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மத்தியிலும் மாகாண சபை உறுப்பினர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்க்கும் அளவிற்கு நம்பகமான ஒரு அரசியல்வாதியாக ஜெயலலிதா விளங்குகிறாரா?
பதில்: அன்றைய தினம் சபையில் என்ன நடந்தது என்பதை நீங்கள் உறுதிப்படுத்த முடியும். தங்களது தகவல் தவறானது.
கேள்வி: ஜெயலலிதா, சிறிலங்காத் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தனது ஆதரவை வழங்குவார் என்பது நம்பகமற்றது. இந்நிலையில் சிறிலங்கா அரசாங்கத்துடன் தொடர்பைப் பேணுவதில் தங்களுக்குத் தடையாக உள்ள காரணிகள் எவை?
பதில்: திரு.செல்வநாயகம், திரு.அமிர்தலிங்கம் கடந்த காலத்தில் இதற்காகப் பணியாற்றினர். தற்போது திரு.சம்பந்தன் தனது பணியைத் திறம்பட ஆற்றி வருகிறார். முதல் இரு தலைவர்களினதும் முயற்சிகள் தோல்வியுற்றன. ஆனால் மூன்றாவது தலைவரின் எண்ணங்கள் வெற்றியடையும் என நம்புவோம்.
கேள்வி: அண்மையில் சிறிலங்காவின் வடக்கிற்குப் பயணித்த அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் மற்றும் நோர்வே இராஜாங்கச் செயலர் ரோர் கற்றேம் ஆகியோர் தங்களிடம் என்ன கூறினார்கள்? இவர்கள் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுமாறு வடக்கு மாகாண சபைக்கு ஆலோசனை வழங்கியதாக ஊடகங்கள் தெரிவித்தன.
பதில்: நாங்கள் அதாவது தமிழர்கள் மற்றும் முஸ்லீம்கள் ஒன்றிணைந்தே இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவந்தோம். ஆகவே நாங்கள் அரசாங்கத்துடன் பணியாற்றுகிறோம். ஆனால் கடந்த கால அரசியற் செயற்பாடுகள் தற்போதும் பின்பற்றப்படுவது எமக்கு வேதனை அளிக்கிறது. நாங்கள் கூறிய கருத்தை நோர்வே இராஜாங்கச் செயலர் புரிந்து கொண்டார். ஆனால் சமந்தா, தனது அரசாங்கத்தின் பூகோள அரசியல் நலன்களுக்காகச் செயற்பட்டார். ஆகவே எமக்கு ஆலோசிப்பதற்கு எவ்வித அவசியமும் இல்லை. ஏனெனில் நாங்கள் ஏற்கனவே அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுகிறோம்.
கேள்வி: தங்களது அணுகுமுறை தொடர்பாக இந்திய உயர் ஆணையாளர் அதிருப்தி வெளியிட்டாரா? ஈழத்தமிழர் விவகாரங்களைத் தீர்ப்பதற்குத் தாங்கள் இன்னமும் வெளிநாட்டு சக்திகள் மற்றும் ஐக்கியநாடுகள் சபை போன்றவற்றின் மீது தங்கியுள்ளீர்களா?
பதில்: எதன் மீதான அணுகுமுறை? நானும் திரு.சின்காவும் நல்லதொரு உறவைப் பேணுகிறோம். இந்த அரசாங்கமானது ராஜபக்சாக்களைத் தோற்கடிப்பதற்காக வெளிநாட்டு சக்திகள் மீது தங்கியிருந்தது. அவர்கள் தற்போது ஐக்கிய நாடுகள் சபையில் தங்கியிருக்க முயற்சிக்கிறார்கள். ஆகவே, ஒவ்வொருவரின் உறவு நிலையானது கடந்தகால வாழ்வின் நிலைப்பாட்டிலேயே தங்கியுள்ளது.
கேள்வி: புலம்பெயர் தமிழ் சமூகத்தின் மீது அதீத நம்பிக்கையைத் தாங்கள் கொண்டுள்ளீர்கள். ஆனால் புலம்பெயர் சமூகத்தால் புலிகள் அமைப்பைக் காப்பாற்ற முடியவில்லை. புலம்பெயர் தமிழ் மக்கள் ஆர்வத்துடன் செயற்படுகின்றன என நீங்கள் அறிவீர்களா?
பதில்: புலம்பெயர் சமூகம் என்பது எம்மிலிருந்து வேறுபட்டுள்ளது. புலம்பெயர் தமிழ் சமூகத்தை சிறிலங்கா அரசாங்கம் சரிவரப் பயன்படுத்த வேண்டும். புலிகள் அமைப்பு மீதான தோற்றப்பாடானது இன்னமும் தங்களை விட்டு மறையவில்லை. இதற்காக என்மீதோ அல்லது புலம்பெயர் மக்கள் மீதோ பழிசுமத்த வேண்டாம்.
கேள்வி: புலிகள் அமைப்பின் தனிநாடு என்கின்ற கருத்தியலை உள்ளுர் மற்றும் வெளிநாடுகளில் இல்லாமற் செய்வதற்காக அதிபர் மைத்திரிபால சிறிசேன பணியாற்றுகிறார். இது தொடர்பான தங்களின் கருத்து என்ன?
பதில்: நாங்கள் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவளிக்கவில்லை. ஆனால் எமது தனித்துவத்தை அரசாங்கம் அடையாளங் கண்டு கொள்ள வேண்டும். எமது மக்கள் சமனாக மதிக்கப்பட வேண்டும்.
கேள்வி: வடக்கு மாகாண சபைக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் முரண்பாடு தோன்றக் காரணம் என்ன?
பதில்: இராணுவத்துடன் எமக்கு எவ்வித பிரச்சினையுமில்லை. நான் வடக்கிற்கான முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேராவுடன் சிறந்த தொடர்பைப் பேணினேன். இராணுவத்தை வடக்கிலிருந்து வெளியேற்ற வேண்டும் எனக் கோருவது தனிப்பட்ட விடயமல்ல. இது இயற்கையானது, நியாயமானது, அவசியமானது. யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் கடந்து விட்டன. தற்போதும் எமது பகுதியில் இராணுவம் நிலைத்திருப்பதைக் காணலாம். நாங்கள் எமது பொருளாதாரத்தை வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் மேற்கொள்ளலாம். முறையற்ற மீன்பிடி போன்ற மீனவர்களின் பிரச்சினைகளும் காணப்படுகின்றன. இதைவிட நிலக்கையளிப்பு என்பதும் பிரச்சினையாகும். பிறிதொரு கொஸ்கம போர்ச் சூழல் உருவாகும். கொஸ்கமவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு போன்ற பிறிதொரு சம்பவம் இடம்பெறக் கூடாது.
வழிமூலம் – சண்டே ஒப்சேவர்
மொழியாக்கம் – நித்தியபாரதி