அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்பின் யாழ்ப்பாண பயணம், வட மாகாண மக்களுக்கு எந்த நன்மையையும் தரவில்லை என்று, வடமாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்துக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், அமெரிக்க விமானப்படையினரால் மேற்கொள்ளப்படும் ஒப்பரேசன் பசுபிக் ஏஞ்சல் என்ற மனிதாபிமான மருத்துவ உதவித் திட்டத்தை ஆரம்பித்து வைத்ததுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. வடக்கு மாகாணசபை, பொது அமைப்புகள், உள்ளிட்ட தரப்புகளுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.
இந்தப் பேச்சுக்கள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம்,
“அமெரிக்கத் தூதுவரின் யாழ். வருகை, வடக்கு மாகாண மக்களுக்கு நன்மை தருவதாக இல்லை.
அவருக்கு எமது பிரச்சினைகளை எடுத்துக் கூறிய போது. அதற்கான நிவாரணங்களை அளிப்பதாக எந்த வாக்குறுதியையும் அளிக்கவில்லை.
வடக்கு மக்களின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு உதவுமாறு நாம் கேட்டோம். அதற்கும் அவர் அமைதியாகவே இருந்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.