அடுத்து நடக்கவுள்ள எந்தவொரு அதிபர் தேர்தல்களிலும் தான் போட்டியிடப் போவதில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று அஸ்கிரிய, மல்வத்தை பீடங்களில் மகாநாயக்க தேரர்களை கோத்தாபய ராஜபக்ச சந்தித்துப் பேசினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,
“அடுத்த அதிபர் தேர்தலில் நான் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகப் பரவிய வதந்தியால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டேன்.
இராணுவ அதிகாரியாக இருபது ஆண்டுகள் நாட்டுக்கு மிகச் சிறந்த சேவையை ஆற்றியுள்ளேன். பாதுகாப்புச் செயலராக மேலும் 10 ஆண்டுகள் பணியாற்றினேன்.
அரசியலில் எனக்கு அனுபவம் இல்லை.
கூட்டு எதிரணியால் இரத்தினபுரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணி தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. நான் அப்போது இரத்தினபுரியில் இருந்தாலும் கூட அந்தப் பேரணியில் கலந்து கொள்ளமாட்டேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.