சிறிலங்கா கடற்படைக்கு அடுத்த ஆண்டில் அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று கிடைக்கலாம் என்று எதிர்பார்ப்பதாக சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்காவிடம் இருந்து போர்க்கப்பல் ஒன்றை பெற்றுக் கொள்வது குறித்த பேச்சுக்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளதாகவும், இந்தக் கப்பலை பரிமாற்றம் செய்வது பற்றிய முடிவு அடுத்த ஆண்டு எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர், சிறிலங்கா கடற்படையின் அடிப்படைத் தேவை அதிவேகத் தாக்குதல் படகுகளில் இருந்து பாரிய போர்க்கப்பல்களாக மாற்றமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, பாரிய போர்க்கப்பல்களைப் பெற்றுக் கொள்வதிலேயே சிறிலங்கா கடற்படையின் கவனம் திரும்பியுள்ளதாகவும், இந்தியாவிடம் இருந்து விரைவில் இரண்டு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் பெறப்படவுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்.

சிறிலங்கா கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்பு ஆற்றலை அதிகரிக்கும் வகையில், அமெரிக்க கடலோரக் காவல்படையால் பயன்படுத்தப்பட்ட கப்பல் ஒன்று 2005ஆம் ஆண்டு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

சமுத்ர என்று பெயரிடப்பட்ட இந்தக் கப்பல் கடற்புலிகளின் கப்பல்களை அழிக்கும் நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியது.

இந்த நிலையிலேயே மற்றொரு போர்க்கப்பலை சிறிலங்கா கடற்படை  அமெரிக்காவிடம் இருந்து பெற்றுக் கொள்ளவுள்ளது.

சிறிலங்கா கடற்படைத் தளபதி அண்மையில் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, தெற்கு மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச்செயலர் நிஷா பிஸ்வால் மற்றும் கடற்படை அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார் என்பது குறிபிடத்தக்கது.